search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர் பிரச்சனை"

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
    • அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

    சென்னை:

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக மேற்கண்ட அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமலேயே இருந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கணக்கிட்டு கடந்த 12.7.2024 முதல் 31.7.2024 வரையில் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. என்ற கணக்கில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

    ஆனால் இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ் குமார், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உரிய முடிவுகளை எடுத்து அதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டது.
    • தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

    சென்னை:

    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

    தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

    தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முக ஸ்டாலின் கூறினார். மேலும் தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும்.

    இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக கலந்து கொள்ளும் என எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக தரப்பில் டெல்டாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ., முக்கிய நிர்வாகி கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    • CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.
    • CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

    தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

    இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின்

    அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

    இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன்.

    இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

    • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

    கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

    கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
    • உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடியினை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதும், ஜனவரி 28-ந்தேதி நீர்திறப்பு நிறுத்தப்படுவதும் வழக்கம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தபட்சம் 90 டி.எம்.சி. இருந்தால், ஜூன் மாதம் 12-ந்தேதி நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

    இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற காவேரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ஜூலை 31-ந் தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு டி.எம்.சி. நீரைக்கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக முதலமைச்சரின் இந்தப் பேச்சு உச்சநீதிமன்றத்தினை அவமதிப்பதாகும்.

    இருப்பினும், இது குறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ தி.மு.க. முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. 'உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லிக் கொண்டு, உரிமைக்கு குரல் கொடுக்காமல் மவுனம் சாதிப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

    தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவேரி ஒழுங்காற்றுக் குழு வினுடைய உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.
    • இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒன்றை மணி நேரம் நடைபெற்றது.

    இதில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகியே மாநிலங்களின் அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.

    அதேபோல் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலங்களின் அணைகளில் உள்ள நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

    ஜூன் மாதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்திருந்தது.

    அப்போது கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது.


    அதேபோல் தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு பிலிகுண்டுலு அணையில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பருவக் காலம் என்பதல் கர்நாடாகவில் போதிய நீர் இருக்கும் என்ற காரணத்தால் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு வழக்கம் போல் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், குடிநீர்த் தேவைக்கே தண்ணீர் உள்ளதாகவும் கூறிவிட்டது. அதேபோல் தமிழகம் கேட்கும் அளவிற்கு நீர் திறந்து விட முடியாது. அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு என்பதை பொறுத்து தண்ணீர் திறந்து விட முடியும் என்று கர்நாடகா தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

    • குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம்.

    சென்னை:

    சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :-

    ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.

    குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.

    காவிரி விவகாரத்தை அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
    • காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூட இருக்கிறது. இம்முறையாவது தமிழகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க கர்நாடகா அரசிற்கு உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் 28 கூட்டங்களை கூட்டியுள்ளது, ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு மாநில மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப உத்தரவுகளை இடவேண்டும்.

    கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இது சரியான செயலல்ல. காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    நாளை (4-ந்தேதி) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக மக்களின் தேவையறிந்து, கடந்த காலத்தில் இரு மாநில அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய, உரிய தண்ணீரை பெற்றத்தர உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
    • காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.


    எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.

    அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    ×